‘பயர்’ படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

சென்னை,
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் பாலாஜி முருகதாஸ். இவர் அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கத்தில் ‘பயர்’ படத்தில் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டிகே இசையமைத்துள்ளார்.
இப்படம் 2020-ம் ஆண்டு நடந்த நாகர்கோவில் காசி என்ற வழக்கை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. காசி என்பவர் காம பித்து பிடித்தவன். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதை படம் பிடித்து அவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் ஒரு குணமுடையவன். நல்லவர் போல் பழகும் காமுகர்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சமூக பொறுப்போடு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஓ.டி.டி உரிமையை பிரபல நிறுவனமான ‘டென்ட்கொட்ட’ ஓ.டி.டி தளம் கைப்பற்றியது. மேலும், இப்படம் விரைவில் ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.