‘பராசக்தி’ பட தலைப்பு விவகாரம்…தயாரிப்பாளர்கள் பரஸ்பரம்

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனின் 25-வது படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. அதில் இப்படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதேபோல, அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் 25-வது படத்தின் தலைப்பு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ”சக்தித் திருமகன்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு மொழியில் இப்படத்திற்கு ‘பராஷக்தி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்குமே இப்படங்கள் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களுக்கும் ஒரே தலைப்பு வைக்கப்பட்டுள்ள சர்ச்சை எழுந்தது.
இதற்கிடையில், விஜய் ஆண்டனி ஏற்கனவே ‘பராஷக்தி’ என்ற தலைப்பை பதிவு செய்துவிட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதனைதொடர்ந்து ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தன்னிடமுள்ள ‘பாரசக்தி’ தலைப்பை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துக்கு அளித்ததாக வாழ்த்து தெரிவித்துள்ளது. இதனால் இந்த தலைப்பு யாருக்கு சொந்தமானது என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் மற்றொரு பராஷக்தி படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி இருவரும் நேரில் சந்தித்துகொண்டுள்ளனர். பின்னர் இந்த படங்களின் தலைப்பினால் எழுந்த பிரச்சினையை கலந்து பேசி பரஸ்பரம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.