'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படம் எப்படி இருக்கிறது? – விமர்சனம்

'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படம் எப்படி இருக்கிறது? – விமர்சனம்


சென்னை,

சமீபத்தில் மறைந்த இயக்குநர் சங்கர் தயாள் இயக்கியுள்ள ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’. கடந்த 24-ந் தேதி வெளியான இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு, செந்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் சரவணன், சுப்பு பஞ்சு, லிஸி ஆண்டனி, கோவிந்த மூர்த்தி, சித்ரா லட்சுமணன் ஆகியோரும் நடித்துள்ளனர். ‘சாதக பறவைகள்’ சங்கர் இசை அமைத்துள்ள இந்தப் படம் குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, அரசியல் காமெடி வகைப் படமாக உருவாகியுள்ளது.

இந்தநிலையில், யோகி பாபு நடித்துள்ள ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

அரசியல்வாதியான யோகிபாபு மனைவி, மகனுடன் வசிக்கிறார். அப்போது வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணுடன் தொடர்பு வைத்து அவருக்கும் ஆண் குழந்தை பிறக்கிறது. பிறகு அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகின்றனர். இரண்டு மனைவியரின் மகன்களும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள்.

முதல் மனைவியின் மகன் அரசியலில் தந்தையை விட பெரிய இடத்துக்கு செல்லும் லட்சியத்தோடு பள்ளியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு செயல்படுகிறான். இரண்டாவது மனைவி மகனும் தந்தையின் வாரிசாக அரசியலில் முக்கிய இடத்தை பிடிக்க விரும்புகிறான். இரண்டு மகன்களுமே ஒருவரை வீழ்த்த இன்னொருவர் சதி செய்கிறார்கள். எதிர்காலத்தில் இருவரும் என்ன ஆகிறார்கள் என்பது மீதி கதை.

யோகிபாபு வழக்கம்போல் உடல் மொழியால் சிரிக்க வைக்கிறார். மாணவர்களாக வரும் இமய வர்மன், அத்வத் ஜெய் மஸ்தான் இருவரும் வயதையும் மீறி சிறந்த நடிப்பை வழங்கி உள்ளனர். அரசியல் கட்சி தலைவராக வரும் செந்தில் அனுபவ நடிப்பால் கவர்கிறார். சிறுமி ஹரிகா கதாபாத்திரம் நேர்த்தி. இன்னொரு அரசியல்வாதியாக வரும் பஞ்சு சுப்பு அமைதியும், ஆவேசமும் காட்டி கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார்.

சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிசி ஆண்டனி, வையாபுரி, கும்கி அஸ்வின், சரவணன், சோனியா என்று இதர கதாபாத்திரங்களில் வருபவர்களும் நிறைவு. சில காட்சிகள் லாஜிக் இல்லாமல் நகர்வது பலவீனம்.

சங்கரின் பின்னணி இசை கதையோடு பயணித்துள்ளது. லட்சுமண் குமாரின் ஒளிப்பதிவு பலம். வாரிசு அரசியல் கதையை போட்டி, பொறாமை, சதி, மோதல் என்றெல்லாம் மாணவ, மாணவியரை வைத்து சுவாரசியமாக சொல்லி உள்ளார் இயக்குனர் சங்கர் தயாள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *