அசிங்கமாக பேசுவது, பின் மன்னிப்பு கேட்பது இயக்குநர் மிஷ்கினின் வழக்கம் – நடிகர் விஷால்

சென்னை,
‘பாட்டல் ராதா’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மதுப்பழக்கத்தின் அடிமைத்தனம் மற்றும் தீங்கைக் குறித்து பலர் பேசினர். ஆனால், இயக்குநர் மிஷ்கின் மதுப்பழக்கத்தைக் கொண்டாடுவதாகக் கூறி தன் பேச்சை துவங்கினார். இளையராஜாவின் இசைதான் என் போதைக்கு சைட் டிஷ். அவர்தான் பலரையும் குடிகாரன் ஆக்கினார் என்றும் பேசி இருந்தார். இயக்குனர் மிஷ்கின் பேசிய அவதூறு வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளானது.
இந்த விஷயத்தை குறித்து திரைத்துறையை சேர்ந்த பலரும் மிஷ்கினை கண்டித்து வீடியோவை பதிவிட்டனர். நடிகர் அருள்தாஸ், “மேடையில் எப்படி பேச வேண்டும் என மிஷ்கின் தெரிந்துகொள்ள வேண்டும். பல புத்தகங்களைப் படித்து உலக சினிமாக்களை பார்த்தால் மட்டும் போதாது. நாகரீகம் தெரிய வேண்டும். இளையராஜா, பாலா போன்ற வயதில் மூத்த சாதனையாளர்களை அவன், இவன் என ஒருமையில் பேசுகிறார். முதலில் நீ யார்? பெரிய அறிவாளியா?” எனக் கடுமையாக தன் கண்டனங்களைப் பதிவு செய்தார். இதையடுத்து, அவர் ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், இயக்குநர் மிஷ்கினின் பேச்சுக்கு விஷால் கண்டனம் மற்றும் விமர்சனங்களை தெரிவித்துள்ளார். விஷால் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மிஷ்கின் பேசிட்டு மன்னிப்பு கேட்டாரா? அதான். அவருக்கு இதுவே வேலையா போய்விட்டது. நாம என்ன பண்ண முடியும் . சுபாவத்தை மாத்த முடியாது. மேடை நாகரீகம் என ஒன்று இருக்கு. அதை தாண்டி கெட்ட வார்த்தை யூஸ் பண்ணா எப்படி. சில பேரோட சுபாவம் எல்லாம் மாத்த முடியாதது. அவர் பேசுவதை கைதட்டி கேட்பதை பார்க்க வருத்தமாக உள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவை அவன் இவன் என்று மேடையில் பேச யாருக்கும் அதிகாரமோ அருகதையோ கிடையாது. அவர் கிட்டத்தட்ட கடவுளின் குழந்தை. அவரோட பாட்டை கேட்டு நிறைய பேர் டிப்ரஷன்ல இருந்து வெளிய வந்திருக்காங்க. சந்தோஷம் அடைஞ்சிருக்காங்க. இத்தனை வருஷத்துல மணிரத்னம் மாதிரி எத்தனை டைரக்டரை ஏத்தி விட்டுருக்காங்க. அவரை அவன் இவன்னு பேசுறது எல்லாம் நான் வன்மையாக கண்டிக்கிறேன். யுவன், பவதாரணி, வாசுகி, கார்த்திக் ராஜா எல்லாம் என்னோட குடும்பம் மாதிரி. அவரை மரியாதை இல்லாம பேச யாருக்கும் உரிமை இல்ல. மன்னிப்பு கேட்டாலும், அவர் பேசியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்’ என்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் அரசியல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த விஷால், ‘நடிகர் விஜய்யின் தேர்தல் அறிக்கைக்கு பிறகு எனது நிலைப்பாட்டை தெரிவிப்பேன்’ என்றார்.
விஷால், இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் 2ம் பாக அறிவிப்பு வெளியான நிலையில், அவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது, மிஷ்கின் பட விழா ஒன்றில் விஷாலை ஒருமையில் பேசியதுடன், அவரை மிகவும் அநாகரீகமான வார்த்தைகளில் திட்டியது குறிப்பிடத்தக்கது.�