கலைமாமணி விருதை காணோம்.. நடிகர் கஞ்சா கருப்பு போலீசில் புகார்

கலைமாமணி விருதை காணோம்.. நடிகர் கஞ்சா கருப்பு போலீசில் புகார்


சென்னை,

நடிகர் கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் பிதாமகன் படத்தின் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டவர். அதை தொடர்ந்து இவர் ராம், சிவகாசி, சண்டக்கோழி, பருத்திவீரன், தெனாவட்டு, நாடோடிகள் என பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார்.சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட கஞ்சா கருப்பு, சசிக்குமார் இயக்கத்தில் உருவான சுப்பிரமணியபுரம் படத்தில் மிகச்சிறப்பான வேடத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

100 படங்களுக்கு மேல் நடித்துள்ள கஞ்சா கருப்பு, 2010-ம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2014-ஆம் ஆண்டு தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கொண்டு வேல் முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்தார். மகேஷ் நடிப்பில் வெளியான இந்த படத்தில் கஞ்சா கருப்பும் நடித்திருந்தார்.ஆனால், படம் சரியாக ஓடாததால், கையில் இருந்த அனைத்து பணத்தையும் இழந்து கடனாளி ஆனார். தனக்கு சினிமா வாழ்க்கை கொடுத்த ‘பாலா – அமீர்’ என்ற பெயரில்தான் கஞ்சா கருப்பு சொந்த வீட்டை கட்டியிருந்தார். கடனை அடைக்க அந்த வீட்டையும் விற்க வேண்டிய நிலைக்கு கஞ்சா கருப்பு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு தனது கலைமாமணி விருதை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதாவது சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் கஞ்சா கருப்புக்கும் அவருடைய ஹவுஸ் ஓனருக்கும் இடையில் பிரச்சனை இருந்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக கஞ்சா கருப்பு, “ஆரம்பத்தில் எனக்கும் ஹவுஸ் ஓனருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை. அவர் கேட்பதற்கு முன்பாகவே நான் வாடகை கொடுத்து விடுவேன். இருந்தாலும் சில தினங்களுக்கு முன்னர் திடீரென்று வந்து வீட்டை காலி செய்ய வேண்டும். எனக்கு வீடு வேண்டும் என்று சொன்னார் என் ஹவுஸ் ஓனர். அதன் பின்னர் நான் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டேன். அவரும் சரி என்று சொன்னார். ஆனால் நான் சமீபத்தில் மதுரை சென்றிருந்தபோது பூட்டிய வீட்டை உடைத்து வெள்ளை அடிச்சிருக்காங்க. அந்த சமயத்தில் என் வீட்டுக்குள் இருந்த கலைமாமணி விருது டாலரையும் காணவில்லை. இதனால்தான் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியதாகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

கஞ்சா கருப்பு அளித்த புகாரின் பேரில், மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரு தரப்பு விசாரணைக்குப் பின்பே முழு விவரம் தெரிய வரும் என தெரிவித்தனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *