சிறந்த நடிகருக்கான விருதை நிராகரிக்கிறேன் – நடிகர் சுதீப்

பெங்களூரு,
கர்நாடக அரசு 2019-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. இதில் ‘பயில்வான்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் சுதீப்புக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த விருதை நிராகரிப்பதாக நடிகர் சுதீப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
சிறந்த நடிகராக என்னை தேர்ந்தெடுத்ததற்காக விருது குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறேன். இந்த விருது எனது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். அதே நேரத்தில் எனது முடிவு உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும். அதாவது நான் கடந்த சில ஆண்டுகளாக விருதுகள் பெறுவதை நிறுத்திவிட்டேன். அதை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன்.
கலைக்காக தங்களை அர்ப்பணித்து நிறைய பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து இந்த விருது வழங்குமாறு கேட்டு கொள்கிறேன். விருது குழுவினர், மாநில அரசிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நீங்கள் எனது முடிவை மதிப்பீர்கள் என்று கருதுகிறேன். நான் எடுத்த முடிவில் பயணிக்க நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.