வீல் சேரில் நடிகை ராஷ்மிகா மந்தனா… என்னதான் ஆச்சு? வீடியோ வைரல்

கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, “கீதா கோவிந்தம்”, “டியர் காம்ரேட்”, “பீஷ்மா” உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பாலிவுட்டில் ‘அனிமல்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது நாட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா மிகவும் விரும்பப்படும் கதாநாயகிகளில் ஒருவராகவும் மாறியுள்ளார். இவர் நடிப்பில் குபேரா, சிக்கந்தர் படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘சாவா’. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் ‘சாவா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு மும்பை விமான நிலையம் வந்த நடிகை ராஷ்மிகா வீல் சேரில் வந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது ராஷ்மிகாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஷூட்டிங்க்கு செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் ராஷ்மிகா. ஆனால், காயத்தையும் பொருட்படுத்தாமல் ‘சாவா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு வந்தார். இதனால் அவர் நடக்க முடியாத நிலையில், வீல் சேரில் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.