மீண்டும் போதையில் ரகளை: 'ஜெயிலர்' வில்லன் நடிகரின் வீடியோ வைரல்

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன். சிறந்த நடிப்புக்காக மாநில அரசின் விருதுகள் வாங்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.
எர்ணாகுளத்தில் வசித்து வரும் நடிகர் விநாயகன் சில மாதங்களுக்கு முன் அவரது மனைவியுடன் சண்டையிட்ட சம்பவத்தில் காவலர்களிடம் ரகளை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார். பின், கோவாவில் தேநீர் கடைக்கு முன் குடித்துவிட்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களைக் கடுமையாக வசைபாடினார். அந்த விடியோ இணையத்தில் வெளியாகி விநாயகன் மீதான மதிப்பைக் கெடுத்தது.
இந்த நிலையில், மதுபோதையில் தன் வீட்டிலிருந்தபடி சாலையில் செல்வோரை விநாயகன் தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதனை, எதிர் வீட்டிலிருந்தவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, மீண்டும் விநாயகனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் புகார் செய்யவில்லை என்றும், புகார் செய்தால் நடிகர் விநாயகன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொச்சி போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு நடிகர் விநாயகன் முகநூலில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனி நபராகவும், நடிகராகவும் பல பிரச்சனைகளில் தான் போராடுவதாகவும், பல பிரச்சனைகளை தன்னால் கையாள முடியவில்லை. என் எதிர்தரப்பினரிடமும் பொதுமக்களிடமும் மன்னிப்புக் கேட்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.