Hema Malini Receives Padma Vibhushan Ustad Ghulam Mustafa Khan Award

பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசைக் கலைஞரான உஸ்தாத் குலாம் முஸ்தபா கான், ஆஷா போஸ்லே, ஏ.ஆா். ரகுமான், சோனு நிகம், ஹரிஹரன், ஷான், ஷில்பா ராவ் உள்ளிட்ட இசை பிரபலங்களுக்கு குரு ஆவாா். இவரது கலைச்சேவையைப் பாராட்டி பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், சங்கீத நாடக அகாதெமி விருது உள்ளிட்ட உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளன. இவரது நினைவு நாளையொட்டி மும்பையில் ‘ஹாஸ்ரி’ இசை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மும்பையின் பாந்த்ராவில் உள்ள ‘ஜியோ’ பன்னாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஹேமமாலினிக்கு ‘பத்ம விபூஷன் உஸ்தாத் குலாம் முஸ்தபா கான்’ விருது வழங்கப்பட்டது.
இந்திய கலை மற்றும் கலாசாரத்தில் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரித்து, ஹேமமாலினிக்கு இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான் இந்த விருதை வழங்கினாா். மகாராஷ்டிர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சா் ஆசிஷ் ஷெலாா் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிரிக்கெட் வீரா் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கா், மகள் சாரா டெண்டுல்கா், இயக்குநா் ஹன்சல் மேத்தா, நடிகா்கள் ஷரத் கேல்கா், கீா்த்தி கேல்கா் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனா்.
விருதளிக்கும் விழாவைத் தொடா்ந்து, ஏ.ஆா்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரகுமான் பல்வேறு சூபி பாடல்களைப் பாடி, தனது குருவுக்கு மரியாதை செலுத்தினாா்.