சிரஞ்சீவி படக்குழுவின் நெகட்டிவ் விமர்சன தடுப்பு நடவடிக்கைக்கு பிரபல நடிகர் வரவேற்பு

சிரஞ்சீவி படக்குழுவின்  நெகட்டிவ் விமர்சன தடுப்பு நடவடிக்கைக்கு பிரபல நடிகர் வரவேற்பு


பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் ‘மன சங்கர வர பிரசாத் காரு’. இந்த படம் சிரஞ்சீவியின் 157வது படமாகும். அனில் ரவிபுடி ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஷைன் ஸ்கிரீன்ஸ் பேனரின் கீழ் சாஹு கரபதி தயாரித்துள்ளார். இதில் கேத்தரின் தெரசா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ளார். இப்படத்தில் வெங்கடேஷ் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.இன்று வெளியான சிரஞ்சீவியின் ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் படக்குழு படத்தின் மீதான நெகட்டிவ் விமர்சனங்களை தடுக்க ஒரு முன்னெடுப்பு எடுத்துள்ளது. அதாவது டிக்கெட் முன்பதிவு தளங்களில் கொடுக்கப்படும் ரேட்டிங் மற்றும் பதிவிடப்படும் கருத்துகள் ஆகிய இரண்டினையும் செய்யாதபடி நீதிமன்றம் மூலம் தடை பெற்றுள்ளது. பொதுவாக இந்த தளங்களில் கொடுக்கப்படும் ரேட்டிங் மற்றும் கருத்துகள் போலியானவை என சொல்லப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளது படக்குழு. இதனால் படத்திற்கான நெகட்டிவ் கருத்துகள் உள்ளிட்டவை பெருமளவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

இந்த முன்னெடுப்பை விஜய் தேவரக்கொண்டா வரவேற்றுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்த முன்னெடுப்பை கண்டு மகிழ்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது – பலரின் கடின உழைப்பையும் கனவுகளையும் பணத்தையும் ஒரு வகையில் பாதுகாக்கப்படுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அதே சமயம் நம் சொந்த மக்களே இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள் என்ற யதார்த்தத்தைக் கண்டு வருத்தமாகவும் இருக்கிறது. ‘வாழு, வாழ விடு’ என்ற கொள்கைக்கும், அனைவரும் ஒன்றிணைந்து வளர்வோம் என்ற கொள்கைக்கும் என்ன ஆனது.

‘டியர் காம்ரேட்’ படத்தின் போதுதான், குறிவைக்கப்பட்ட தாக்குதல்களில் இருக்கும் அதிர்ச்சியூட்டும் அரசியலை முதல் முறையாக பார்த்தேன். இத்தனை ஆண்டுகளாக என் குரல், செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது. ஒரு நல்ல படத்தை யாராலும் தடுக்க முடியாது என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால், அதன்பிறகு என்னுடன் படம் தயாரிக்கும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் இயக்குநரும் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டனர். இதுபோன்ற செயல்களைச் செய்யும் மனிதர்கள் யார், பலரின் கனவுகளைப் பாதுகாக்க அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்து பல இரவுகள் நான் தூங்காமல் இருந்திருக்கிறேன். இப்போது இது வெளிப்படையாகியிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பெரிய நடிகர்களின் படங்களுக்குக் கூட அச்சுறுத்தலை இருக்கும் என்பதை நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. இது இந்த பிரச்சனைக்கு முழுமையான தீர்வு இல்லை. ஆனால் நம் கவலையை இது குறைத்திருக்கிறது” என்றார்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *