Jujutsu Kaisen (2026): திரை விமர்சனம்

வெப் சீரிஸில் சக்கைபோடுபோட்ட Jujutsu Kaisen: Hidden Inventory/Premature Deathயின் திரைப்படம் குறித்த விமர்சனத்தை இங்கே காண்போமா.
கதைக்களம்
2006ஆம் ஆண்டில், ஜுஜுட்சு குழுவைச் சேர்ந்த பெண்களான இயோரியும், மெய் மெய்யும் ஒரு சபிக்கப்பட்ட வீட்டைப்பற்றி விசாரணை செய்ய செல்கின்றனர்.
ஆனால் அவர்கள் அதற்குள் சிக்கிக் கொள்கின்றனர்.
அப்போது சடோரு கோஜோ, சுகுரு கெட்டோ மற்றும் ஷோகோ லெய்ரி ஆகியோர் இயோரி, மெய் மெய் ஆகிய இருவரையும் மீட்கின்றனர்.
இந்த சூழலில், மாஸ்டர் டென்கனிடம் இருந்து கோஜோ, கெட்டோவுக்கு ஒரு வேலை கொடுக்கப்படுகிறது.
அதாவது, தற்போதைய வெசலான 14 வயது ரிகோ அமானைப் பாதுகாக்க அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அதன் பின்னர் ரிகோவுக்கு என்ன ஆனது? கோஜோவும், கெட்டோவும் எதிரிகளை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
ஜுஜுட்சு கைசென் அனிமே சீரிஸின் இரண்டாவது சீஸன் (சில எபிசோட்கள்) மற்றும் புதிய சீஸனின் காட்சிகளை வைத்து, இயக்குநர் சௌடா கோஷோஸோனோ இப்படத்தை கொடுத்துள்ளார்.
சீரிஸின் இரண்டு சீஸன்களையும் பார்த்தவர்களுக்கு இப்படத்தின் முதல் பாதியின் கதை தெரிந்துவிடும். பார்க்காதவர்களுக்கு சர்ப்பரைஸ் விஷயங்கள் நிறைய உள்ளன.
குறிப்பாக, ரிகோ சம்மந்தப்பட்ட காட்சிகளில் திக் மொமெண்ட்கள் உள்ளன.
எனினும், முதல் பாதியில் சண்டைக்காட்சிகள் பெரிதாக இல்லாததால் சுவாரஸ்யம் குறைவாகவே செல்கிறது.
இரண்டாம் பாதியில் வில்லன் டோஜி ஃப்ஷிகுரோவின் கதாபாத்திரம் மிரட்டுகிறது. அவர் செய்யும் சம்பவங்கள் அதிர வைக்கிறது.
ட்விஸ்ட்கள் அட என்று கூற வைக்கும் வகையில் உள்ளன. பெரும்பாலான காட்சிகள் சீஸன் 2யில் இருப்பவைதான் உள்ளன என்பதால், இந்தப் படம் ஒரு ரீகேப் ஆகவே தோன்றுகிறது.
அதே சமயம் பெரிய திரையில் பார்ப்பதற்கு பல காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன.
சவுண்டிங் சிறப்பாகவும், துல்லியமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 8ஆம் தேதி மூன்றாவது சீஸன் வெளியாவதனால், அதற்கு எதிர்பார்ப்பை கூட்டும் அளவிற்கு இப்படம் அமைந்துள்ளது என்றே கூறலாம்.
ஆனால் தனி படமாக பார்க்கும்போது இரண்டாம் பாதியில் இருந்த சுவாரஸ்யம் முதல் பாதியில் இல்லை.
சீரிஸ் பார்த்துவிட்டு வருபர்களை நிச்சயம் இப்படம் கவரும். ஆனால் பார்க்காமல் வருபவர்களை ஈர்க்குமா என்பதில் சந்தேகமே.
க்ளாப்ஸ்
கதைக்களம்
அனிமேஷன்
சவுண்ட் எப்ஃபெக்ட்ஸ்
ட்விஸ்ட்கள்
பல்ப்ஸ்
ரீகேப் போன்ற திரைக்கதை
மெதுவாக நகரும் முதல் பாதி






