தமிழ் சினிமா 2025: 280 படங்கள் வெளியானாலும் ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம்

தமிழ் சினிமா 2025: 280 படங்கள் வெளியானாலும் ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம்


சென்னை,

தமிழ் சினிமா வரலாற்றில் 2025-ம் ஆண்டு வசந்த காலம் என்றே சொல்லலாம். காரணம். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டுதான் 280 படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், வெற்றிப் படங்களை கணக்கிட்டால் மிகவும் குறைவுதான். தென்மாநில படங்களில் இந்த ஆண்டு வசூல் சாதனையில் முதலிடம் பிடித்த படம் ‘துரந்தர்’. ரூ.1,000 கோடியே கடந்து வசூலில் வாரி குவித்து வருகிறது. இரண்டாவது இடத்தை கன்னட படமான ‘காந்தாரா சாப்டர் 1’ பிடித்துள்ளது. இந்தப் படம் ரூ.900 கோடி வசூலித்துள்ளது. 3-வது இடத்தை இந்தி படமான ‘சாவா’வும் (ரூ.800 கோடி), 4-வது இடத்தை மற்றொரு இந்தி படமான ‘சயாரா’வும் (ரூ.630 கோடி), 5-வது இடத்தை தமிழில் வெளியான ‘கூலி’யும் (ரூ.600 கோடி) பெற்றிருக்கிறது.

இந்த ஆண்டு விஜய்யின் படம் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், பொங்கல் விருந்தாக அவரது கடைசி படமான ‘ஜனநாயகன்’ திரைக்கு வர இருக்கிறது.

இந்த ஆண்டு பெரிய பட்ஜெட் படங்கள் என்றால், ரஜினிகாந்தின் ‘கூலி’, கமல்ஹாசனின் ‘தக்லைப்’, அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’, விக்ரமின் ‘வீர தீர சூரன்-2’, சூர்யாவின் ‘ரெட்ரோ’, தனுஷின் ‘குபேரா’, ‘இட்லி கடை’, விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’, சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஆகியவற்றை கூறலாம். ஆனால், இதில் ‘கூலி’, ‘குட் பேட் அக்லி’ படங்கள் மட்டுமே அதிக லாபம் சம்பாதித்து கொடுத்தன.

‘தக்லைப்’, ‘விடாமுயற்சி’, ‘ரெட்ரோ’, ‘குபேரா’, ‘இட்லி கடை’, ‘ஏஸ்’, ‘மாதராஸி’ ஆகியவற்றில் சில படங்கள், ரூ.100 கோடி, ரூ.50 கோடி என்று வசூலைத் தந்தாலும் நஷ்டத்தையே சந்தித்தது. விதிவிலக்காக, ‘குபேரா’ படம் தமிழில் நஷ்டத்தையும், தெலுங்கில் லாபத்தையும் தந்தது. அதே நேரத்தில், குறைந்த பட்ஜெட்டில் தயாரான ‘தலைவன் தலைவி’, ‘மதகஜராஜா’, ‘டிராகன்’, ‘டியூட்’, ‘டூரிஸ்ட் பேமிலி’, ‘பைசன்’, ‘மாமன்’, ‘குடும்பஸ்தன்’, ‘ஆண்பாவம் பொல்லாதது’ ஆகிய படங்கள் அதிக லாபம் சம்பாதித்து கொடுத்தன.

குறிப்பாக, பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’, ‘டியூட்’ படங்கள் ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. இந்த ஆண்டு வெளியான முன்னணி நடிகர்களின் படங்களின் பட்ஜெட்டை கணக்கில் கொண்டால், ரூ.1,600 கோடி வருகிறது. ஆனால், அந்த படங்கள் மூலம் கிடைத்த வசூலும் அதே அளவுக்குத்தான் இருக்கிறது. இதிலும், பங்குத்தொகை, விளம்பர செலவு, ஜிஎஸ்டி உள்ளிட்ட மற்ற செலவுகளை கூட்டி கழித்து கணக்கிட்டால் தயாரிப்பாளருக்கு சுமார் 70 சதவீத பணம்தான் போய் சேர்ந்திருக்கிறது. அதாவது, ரூ.480 கோடி அளவுக்கு நஷ்டமே ஏற்பட்டுள்ளது.

எப்படி பார்த்தாலும் மொத்தம் வெளியான 280 படங்களில் 30 படங்கள் என்ற அளவுக்கே வெற்றியை பெற்றுள்ளன. 250 படங்கள் தோல்வியையே சந்தித்துள்ளன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் 2025-ம் ஆண்டில் தமிழ் சினிமா ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டத்தையே சந்தித்துள்ளது.

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *