‘கே.ஜி.எப்., சலார்’ பட உதவி இயக்குனரின் 4 வயது மகன் ‘லிப்ட்’-ல் சிக்கி பலி

பெங்களூரு,
கன்னட திரைஉலகில் பிரபல சின்னத்திரை இயக்குனராக இருந்து வருபவர் கீர்த்தன் நாடகவுடா. இவர் பிரபல நடிகர் யஷ் நடித்த கே.ஜி.எப்., கே.ஜி.எப்.-2, பிரபாஸ் நடித்த ‘சலார்’ மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய ஏராளமான திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவருக்கு திருமணமாகி சம்ருத்தி படேல் என்ற மனைவியும், 4 வயதில் சிரஞ்சீவி சோனார்ஸ் கே.நாடகவுடா என்ற மகனும் உண்டு. இவர்கள் பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர்கள் ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தனர். அப்போது சிறுவன் சிரஞ்சீவி அங்குள்ள லிப்டில் தனியாக சென்று ஏற முயன்றான். அப்போது திடீரென லிப்ட்-ன் கதவு மூடியது. இதனால் சிறுவன் சிரஞ்சீவி படுகாயம் அடைந்தான். அவனை உடனடியாக கீர்த்தன் நாடகவுடா, அவரது மனைவி மற்றும் அங்கு விழாவில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிறுவன் சிரஞ்சீவி பலியானான். அவனது மறைவுக்கு நடிகர் யஷ், நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.






