ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள்: 41 ஆயிரம் பேர் ‘ஆப்சென்ட்’

ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள்: 41 ஆயிரம் பேர் ‘ஆப்சென்ட்’


சென்னை,

அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். அந்தவகையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றக்கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு தாள்-1 தேர்வும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியக்கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள்-2 தேர்வும் நடத்தப்படுகிறது.அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டது. இதற்கு ஆசிரியர்கள் போட்டிப் போட்டு விண்ணப்பித்தனர்.தகுதித்தாள்-1 தேர்வுக்கு ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 370 பேரும், தகுதித்தாள்-2 தேர்வுக்கு 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேரும் விண்ணப்பித்திருந்தார்கள். இதில் தாள்-1 தேர்வு நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் 367 மையங்களில் நடைபெற்றது. இவர்களில் 92 ஆயிரத்து 412 பேர் தேர்வை எழுதி இருந்தார்கள். அதாவது, 14,958 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதனைத் தொடர்ந்து நேற்று தாள்-2 தேர்வு நடந்தது. 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேரில், 3 லட்சத்து 31 ஆயிரத்து 923 பேர் தேர்வை எழுதினார்கள். 41 ஆயிரத்து 515 பேர் தேர்வு எழுத வரவே இல்லை. நேற்று முன்தினம் நடந்த தாள்-1 தேர்வு வினாக்கள் எளிதாக கேட்கப்பட்டதாக தேர்வர்கள் தெரிவித்திருந்த நிலையில், நேற்று நடைபெற்ற தாள்-2 தேர்வும் சற்று எளிதாக இருந்தது என்று தெரிவித்தனர்.

வழக்கமாக ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதுபவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இந்த ஆண்டு எழுதியவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம். காரணம், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல், ஏற்கனவே பணியில் இருக்கும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் அதில் தேர்ச்சி பெறவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. அவர்களுக்காக சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், சில ஆசிரியர்கள் இந்த தேர்வையும் எழுதி பார்த்திருக்கின்றனர். அவர்களில் சிலர் ஓரளவுக்கு பரவாயில்லாமல் எழுதியிருப்பதாக கூறினர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *