‘எல்லோரும் ஒரே மாதிரி இருந்துவிட முடியாது..’ – உருவகேலி குறித்து மனம்திறந்த கயாடு லோஹர் | ‘Everyone can’t be the same..’

‘எல்லோரும் ஒரே மாதிரி இருந்துவிட முடியாது..’ – உருவகேலி குறித்து மனம்திறந்த கயாடு லோஹர் | ‘Everyone can’t be the same..’


சென்னை,

நடிகை கவுரி கிஷன் நடித்த ‘அதர்ஸ்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின்போது, கதாநாயகன் ஆதித்யா மாதவனிடம், பாடல் காட்சிக்காக கதாநாயகி கவுரி கிஷனை தூக்கி வைத்து நடனமாடியது குறித்தும், கவுரி கிஷனின் எடை குறித்தும் யூடியூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வி குறித்து மற்றொரு பேட்டியில் நடிகை கவுரி கிஷன் ஆதங்கம் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட யூடியூபர் ‘அதர்ஸ்’ படத்தின் ஊடக காட்சிக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கும், நடிகை கவுரி கிஷனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நபர் கேட்டது ‘முட்டாள்தனமான கேள்வி’ என கவுரி கிஷன் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவுரி கிஷ்னுக்கு ஆதரவு பெருகியது. எந்த சூழலிலும் நடிகைகளை உருவகேலி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என திரைப்பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட யூடியூபர், தனது கேள்வி குறித்து வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில், ‘டிராகன்’ திரைப்பட நடிகை கயாடு லோஹர் சென்னையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது உருவகேலி விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

“நாம் எங்கு சென்றாலும் விமர்சனங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அதில் இருந்து தப்பவே முடியாது. அதே சமயம், நாம் அனைவரும் மற்றவர்கள் மீது இன்னும் கொஞ்சம் கருணையோடு இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் வெவ்வேறு விதமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லோரும் ஒரே மாதிரி இருந்துவிட முடியாது. அப்படி எல்லோரும் ஒரே மாதிரி இருந்துவிட்டால் தனித்துவம் என்பதே இல்லாமல் போய்விடும். அனைவரிடமும் அன்பு செலுத்தவும், கருணை காட்டவும் நாம் கற்றுக்கொண்டால், உலக வாழ்க்கை இன்னும் எளிமையாக இருக்கும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *