யாருடைய ‘ஈகோ’ வென்றது?- “காந்தா” திரைப்பட விமர்சனம் | Whose ‘ego’ won?

யாருடைய ‘ஈகோ’ வென்றது?- “காந்தா” திரைப்பட விமர்சனம் | Whose ‘ego’ won?



சென்னை,

சினிமா நடிகருக்கும், அவரை உருவாக்கிய இயக்குனருக்கும் இடையேயான ‘ஈகோ’வை மையப்படுத்திய கதை.

தன்னை ஆளாக்கிய சமுத்திரகனியின் கனவுப்படத்தில் நடிக்கும் துல்கர் சல்மான் திடீரென விலகுகிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு சமரசமாகி வரும் துல்கர் சல்மான், படத்தின் ‘கிளைமேக்ஸ்’ காட்சியை மாற்ற நிர்பந்திக்கிறார். கனவுப்படம் தான் எழுதிய ‘கிளைமேக்ஸ்’ காட்சியுடன்தான் முடியவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சமுத்திரகனி, கதாநாயகியாக நடிக்கும் பாக்யஸ்ரீ போர்சை வைத்து துல்கர் சல்மானை கோபமூட்டி பார்க்கிறார்.

ஒருகட்டத்தில் துல்கர் சல்மானுக்கும், பாக்யஸ்ரீ போர்சுக்கும் இடையே காதல் பற்றிக் கொள்கிறது. இதனால் ஆத்திரமடையும் சமுத்திரகனி தனது ‘கிளைமேக்ஸ்’ காட்சியை எடுக்க தீவிரம் காட்ட, அதற்கு போட்டியாக துல்கர் சல்மானும் முட்டுக்கட்டை போட விளைவுகள் விபரீதமாகிறது. யாருடைய ‘ஈகோ’ வெற்றிப் பெற்றது? யார் நினைத்தது போல் படம் முடிந்தது? என்பதே மீதி கதை.

ஏமாற்றம், அவமானம், கோபம், ஏக்கம், காதல் என எல்லா பரிமாணங்களிலும் பிரமிக்க வைக்கும் நடிப்பைக் காட்டி அசத்தியுள்ளார், துல்கர் சல்மான். காட்சிக்கு காட்சி அவரது நடிப்பு நேர்த்தி. நிச்சயம் விருதுகளை எதிர்பார்க்கலாம்.

துல்கர் சல்மானுக்கு இணையாக நடிப்பில் வெளுத்து வாங்கியுள்ளார் பாக்யஸ்ரீ போர்ஸ். அழுகையில் வரும் அவரது அகோர சிரிப்பு மிரட்டல். வழக்கம்போல அறிவுரை சொல்லி செல்லாமல், நடிப்பில் ‘அடடா’ சொல்ல வைத்துள்ளார் சமுத்திரகனி. ராணாவின் நடிப்பு கொஞ்சம் கடுப்பேற்றவே செய்கிறது.

காயத்ரி சங்கர், நிழல்கள் ரவி, ரவீந்திர விஜய், ஆடுகளம் நரேன், வையாபுரி, பக்ஸ், கஜேஷ் நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் குறைவில்லை. டானி சஞ்செஸ் லோபஸ் ஒளிப்பதிவும், ஜானு சந்தரின் இசையும் அந்தக் காலத்துக்கு கூட்டிச் செல்கிறது.

கனமான திரைக்கதைப் படத்துக்கு பலம். இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் சற்று தொய்வு இருக்கிறது. படத்துக்குள் வரும் படப்பிடிப்பு காட்சிகளைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். பரபரப்பான திரைக்கதையில் வேகத்தடை வேண்டாமே…

நாடக பாணியில் இருந்தாலும், சுவாரசியமான காட்சிகளின் தொகுப்பாக ரசிக்க வைத்திருக்கிறார், இயக்குனர் செல்வமணி செல்வராஜ்.

காந்தா – யானை வெடி.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *