ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிச்சா கார்த்திகாவிற்கு 100 பவுன் நகை போடுறேன்!- மன்சூர் அலிகான் வாக்குறுதி | I will give Karthika 100 pounds of jewelry if she wins gold in the Olympics!

சென்னை,
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் சென்னை – கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா ‘கில்லி’யாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடி தந்தார். இந்தத் தொடரில் அவர் இந்திய அணியின் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய இளையோர் போட்டியின் இறுதியில், ஈரான் அணியை 75-21 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது இந்தியா. இந்த அசாத்திய வெற்றியை கட்டமைத்தவர்களில் ஒருவராக கார்த்திகாவும் உள்ளார். தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு ரூ 25 லட்சம் ஊக்கத்தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதனை தொடர்ந்து, கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவை நடிகர் மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டியுள்ளார். மேலும், “ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிச்சா உன் கல்யாணத்துக்கு 100 பவுன் நகை போடறேன்” என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். இதற்கிடையில், கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி பரிசுத்தொகையும், வீடும் வழங்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.






