விஷ்ணு விஷாலுடன் ‘லிப்லாக்’ காட்சியில் நடிக்க மறுத்த நடிகை

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஆர்யன். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன், மானசா சவுத்ரி உள்பட பலர் நடித்து உள்ளனர். ஜிப்ரான் படத்திற்கு இசை அமைத்து உள்ளார். விஷ்ணு விஷால் தயாரித்து உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வருகிற 31-ந்தேதி திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் விஷ்ணு விஷாலின் மகன் ஆர்யன் போலீஸ் சீருடையில் தந்தை விஷ்ணு விஷாலை கைது செய்து கை விலங்கிட்டு அழைத்து வந்த காட்சிகள் விழாவை கலகலப்பாக்கியது. விழாவில் விஷ்ணு விஷால் பேசுகையில், பான் இந்தியா படங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் மகனின் பெயரை படத்திற்கு வைத்து உள்ளேன். என்னுடைய ஒவ்வொரு படங்களிலும் புதுவிஷயம் ஏதாவது இருக்கும். இந்த படத்திலும் புதுவிஷயம் இருக்கிறது. வித்தியாசமான படங்கள் பண்ணுவதற்கு தான் நான் வந்திருக்கிறேன்.
படத்தில் செல்வராகவன் கதாபாத்திரம்தான் ‘ஹைலைட்’. கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது மானசா சவுத்ரியுடன் ‘லிப் லாக்’ காட்சி எடுக்க முடிவெடுத்தோம். இது குறித்து மானசா சவுத்ரியிடம் கேட்ட போது, நான் ஏற்கனவே சில படங்களில் லிப்லாக் கொடுத்து விட்டேன். மீண்டும் இது போன்று நடித்தால் எனக்கு முத்திரை கொடுத்து விடுவார்கள் என்று டைரக்டரிடம் கூறினார். அவர் சொன்னதை டைரக்டர் என்னிடம் சொன்னார். அவர் லிப்லாக் காட்சியில் நடித்திருக்கிறார். நான் இதுவரை எந்த படத்திலும் லிப்லாக் கொடுத்ததில்லையே என்று கேட்டேன். ஆனாலும் ஒரு நடிகராகவும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையிலும் லிப்லாக் காட்சிகளை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.