The news of composer Sabesh’s demise is heartbreaking – Cheran | இசையமைப்பாளர் சபேஷின் மறைவுச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது

சென்னை,
தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. இவரது சகோதரர்களான சபேஷ் மற்றும் முரளி ஆகியோர் சேர்ந்து சபேஷ்-முரளி என்ற இரட்டை இசையமைப்பாளர் குழுவாக பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர். மேலும் இவர்கள் தேவாவின் திரைப்படங்களில் இசை உதவி பணிகளையும் செய்துள்ளனர்.
இந்நிலையில் தேவாவின் சகோதரர் சபேஷ் இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சபேஷ், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் , இம்சை அரசன் 23ஆம் புலிகேசிமற்றும் கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களுக்கு தேவா- சபேஷ் இணைந்து இசையமைத்திருக்கின்றனர். ஜோடி, ஆட்டோகிராப் உட்பட 20 படங்களுக்கு மேல் பின்னணி இசை அமைத்திருக்கின்றனர். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் சபேஷ் பணியாற்றியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சபேஷின் மறைவிற்கு இயக்குநர் சேரன் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக சேரன் வெளியிட்டிருக்கும் பதிவில், “தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் படங்களின் இசையமைப்பாளரில் ஒருவரும் ஆட்டோகிராப் உட்பட மற்ற படங்களில் ரீரெக்கார்டிங்கில் காட்சிகளுக்கு உயிர் சேர்த்தவருமான சபேஷ் அவர்களின் மறைவுச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது .. ஏற்றுக்கொள்ள முடியா இழப்பு.. அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.