இளையராஜா காப்புரிமை விவகாரம்: வருமான வரி விவரங்கள் தாக்கல்|Ilayaraja copyright case: Income tax details filed

சென்னை,
இளையராஜா தொடர்ந்த வழக்கில் சோனி நிறுவனம் வருமான விவரங்களை சீலிட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.
சோனி மியூசிக் என்டர்டைன்மென்ட் இந்திய பிரைவேட் லிமிடட் நிறுவனம், எக்கோ ரெகார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
பல்வேறு ஊடகங்கள் இணையதளங்கள் பல்வேறு நிறுவனங்கள் இசை நிறுவனங்கள் ஆகியவை தனது பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தி வருவதாகவும் இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்றும், குறிப்பாக சோனி நிறுவனம் மற்றும் அதன் சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய பாடல்களை மாற்றியும் பயன்படுத்தி தன்னுடைய அனுமதி இல்லாமல் பல்வேறு வடிவங்களில் அதனை மாற்றி பயன்படுத்தி வருவாகவும் இளையராஜா தெரிவித்தார்.
சோனி நிறுவனம் எக்கோ நிறுவனத்திடம் இருந்து பாடல்களை வாங்கியதாகக் கூறினாலும், அதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை உத்தரவுள்ளதாகவும் அந்த உத்தரவை மதிக்காமல் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் தன்னுடைய பாடல் படைப்புகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தனது பாடல்களை பயன்படுத்தி சோனி நிறுவனம் ஈட்டிய வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை வணிகரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் குறித்த விவரங்கள், வரவு செலவுகளை தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 22 தேதிக்கு(இன்று) தள்ளி வைத்துள்ளார்.
இந்தநிலையில், இன்று இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, வருமான விவரங்களை சீலிட்ட கவரில் சோனி நிறுவனம் தாக்கல் செய்தது. மேலும், சமீபத்தில் வெளியான டியூட் திரைப்படத்தில் கூட தங்களுடைய 2 பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக இளையராஜா தரப்பு கூறியது. அதற்கு நீதிபதி டியூட் திரைப்படம் தொடர்பாக தனியாக வழக்கு தொடரலாம் என்று கூறி வழக்கின் விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.