‘தென் மாவட்டங்களில் பதற்றத்தை தணிக்கவே படம் எடுக்கிறேன்’- மாரி செல்வராஜ்

நெல்லை ,
நெல்லை உடையார்பட்டி ராம் சினிமாஸ் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரம், நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், ரதிஷா விஜயன் உள்ளிட்டோர் கண்டுகளித்ததுடன் ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.
பின்னர் மாரி செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
’விளையாட்டு என்பது தனியானது கிடையாது, அது ஒரு சமூகம் சார்ந்த நிகழ்வாகவே உள்ளது. சாதியை படமாக நான் எடுக்கவில்லை, எனது வாழ்வில் கண்ட பிரச்சினைகள், வலியை படமாக எடுத்து இருக்கிறேன். சாதியை கடந்து வெளியே வந்துவிடலாம் என்பதற்காகவே இதுபோன்ற படங்கள் எடுக்கப்படுகிறது.
இதுவரை என்னால் எடுக்கப்பட்ட படங்களுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கி வருகிறது. அதனால் 10 பேர் அமர்ந்து பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
ஒவ்வொரு படத்துக்கும் எதிர்மறை கருத்துக்கள் வரத்தான் செய்யும், அதனை எதிர்த்து சாகும்வரை எனது பயணம் இருக்கும். தென் மாவட்டங்களில் உள்ள பதற்றத்தை மாற்றுவதற்காகத்தான் இதுபோன்ற படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது’, என்றார்.