இயக்குனருடன் மோதல்.. விஷால் எடுத்த அதிரடி முடிவு

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவரது நடிப்பில் சமீபத்தில் மதகஜராஜா படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் தனது 35வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘மகுடம்’ என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தினை ‘ஈட்டி’ பட இயக்குநர் ரவி அரசு இயக்குகிறார். இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்த கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரவி அரசு உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகுடம் படத்திலிருந்து ரவி அரசு விலகிய நிலையில், இப்படத்தை நடிகர் விஷால் இயக்கி வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சில காட்சிகளை மட்டும் தான் விஷால் இயக்கியதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். இயக்குனராக விஷால் படப்பிடிப்பு தளத்தில் உள்ள வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.