சமூக ஊடகங்களில் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு எதிரான பதிவுகளை நீக்க உத்தரவு

புதுடெல்லி,
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “சில இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்துகின்றன. ஆட்சேபனைக்குரிய பதிவுகளை வெளியிடுகின்றன. எனது ஆளுமை உரிமைகளை பாதுகாக்க வேண்டும்” என கோரி இருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இ்தனை விசாரித்த ஐகோர்ட்டு, நடிகர் ஹிருத்திக் ரோஷனின் ஆளுமை மற்றும் விளம்பர உரிமைகளை பாதுகாக்க, சமூக ஊடகங்களில் அவருக்கு எதிரான சில ஆட்சேபனைக்குரிய பதிவுகளை நீக்க உத்தரவிட்டது. மேலும் சில ரசிகர்களின் பக்கங்களை நீக்குவதற்கு இடைக்காலத்தில் எந்த ஒருதலைப்பட்ச உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை என்றும், அவற்றை விசாரித்த பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கை அடுத்த ஆண்டு மார்ச் 27-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.
சமீபத்தில், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன், திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோகர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்டோர் தங்கள் ஆளுமை மற்றும் விளம்பர உரிமைகளைப் பாதுகாக்க கோரி ஐகோர்ட்டை அணுகினர். கோர்ட்டு அவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.