சரத்குமாரின் பீட்ரூட் ஜூஸ் ரகசியம்.. பிரதீப் ரங்கநாதன் கலகலப்பு

சென்னை,
நவீன் எர்னேனி, ரவி சங்கர் தயாரித்து கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் நடித்த ‘டியூட்’ படம், வருகிற 17-ந்தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.
சென்னையில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, ‘‘தமிழ் சினிமாவில் நான் பார்த்ததிலேயே பழகுவதிலும், உடன் நடிப்பதிலும் வசீகரமான நடிகர் என்றால் அது சரத்குமார் தான். முதன்முறை அவரை பார்த்தபோது ‘சார் உங்கள் வயது என்ன? என்று கேட்டேன். அவர் சொன்னவுடன் ஆடிப்போய் விட்டேன்.
உங்கள் இளமையின் ரகசியம் என்ன? என்று சரத்குமாரிடம் கேட்டேன். தினமும் காலை பீட்ரூட் ஜூஸ் குடிப்பேன் என்றார். அன்று முதல் இன்றுவரை நான் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வருகிறேன். சரத்குமார் வயது வரும்போது, நான் அவரை போலவே உறுதியுடனும், ஆரோக்கியமாகவும் இருக்க ஆசைப்படுகிறேன்.
170-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருந்தாலும், படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சமமாக பார்க்கும் அவரது குணம் எனக்கு பிடித்த ஒன்று”, என்றார். மேலும் இயக்குனர் கீர்த்தீஸ்வரனை தனது தம்பி என்று பிரதீப் ரங்கநாதன் குறிப்பிடும்போது, கீர்த்தீஸ்வரன் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.