அஜித்துக்கு கிடைத்த மாதிரி, பிரதீப் ரங்கநாதனுக்கும்… – “குட் பேட் அக்லி” தயாரிப்பாளர்

சென்னை,
தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் சமீபத்தில் டிராகன் படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.அதனை தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்திலும் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘டியூட்’ படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுவதுமாக காமெடி கலந்த படமாக இப்படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.
மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களிடம் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. தற்போது, பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படத்தையும் மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், டியூட் நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் ரவி ஷங்கர், “நாங்கள் தயாரித்த முதல் தமிழ்ப்படமான ‘குட் பேட் அக்லி’ நடிகர் அஜித் குமாருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. மேலும், அப்படம் தமிழகத் திரையரங்குகளில் பெரிய வணிகத்தைச் செய்தது. அதேபோல், பிரதீப் ரங்கநாதனுக்கும் நிகழ வேண்டும் என விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே – 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.