எத்தனை மொழி படங்களில் நடித்தாலும் தமிழ் சினிமாவில் நடிப்பது பெருமையானது – மம்தா மோகன்தாஸ்

தமிழில் ‘சிவப்பதிகாரம்’, ‘குரு என் ஆளு’, ‘தடையறத் தாக்க’, ‘எனிமி’, ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். தற்போது பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருள்நிதி உடன் ‘மை டியர் சிஸ்டர்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இதுகுறித்து மம்தா மோகன்தாஸ் கூறும்போது, “அருள்நிதிக்கு அக்காவாக இந்த படத்தில் நடித்து இருக்கிறேன். அசாத்தியமான ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை சொல்லும் கதை.
படத்தில் நான் டக்கர் வண்டி ஓட்டும் டிரைவராக நடித்துள்ளேன். உடல் முழுவதும் இரண்டு மணி நேரம் டஸ்கி நிற பெயிண்ட் பூசி நடித்தேன். திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. குறிப்பாக நெல்லை தமிழ் என்னைக் கவர்ந்தது. ‘ஏல’ என்று அவர்கள் பேசும் அந்த வட்டார மொழி எனக்கு மிகவும் பிடித்துப்போனது. இதனால் அந்த கதாபாத்திரத்தில் ரசித்து நடித்து முடித்தேன்.
தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள். என்றென்றும் அதை காப்பாற்ற போராடுவேன். எத்தனை மொழி படங்களில் நடித்தாலும் தமிழ் சினிமாவில் நடிப்பது பெருமையானது. இங்குள்ள ரசிகர்கள் தரும் பாசத்தை எந்த மொழி படங்களிலும் பார்க்க முடியாது” என்றார்.