4ம் நூற்றாண்டு கதைக்களமான “காந்தாரா” படக்காட்சியில் இடம்பெற்ற தண்ணீர் கேன்

கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா சாப்டர் 1’ படம் கடந்த 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படத்தில் ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பழங்குடிகள் – மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியாகி ஒரு வாரத்தில் ரூ. 509.25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்து வரும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற பிரம்ம கலாஷா பாடலில் ஒரு காட்சியில் தண்ணீர் கேன் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் காட்சியில் 3 நிமிடம் 6 ஆவது நொடியில் தண்ணீர் கேன் இடம்பெறுவதை ரசிகர்கள் தற்போது கண்டுபிடித்து வைரலாக்கியுள்ளனர். இதனைக் கண்ட ரசிகர்கள் 400 ஆண்டுகளுக்கு முந்தைய கதையாக உருவான இப்படத்தில் தண்ணீர் கேன் போட வந்தது யார்? எனக் கேலி செய்து வருகின்றனர்.
4ம் நூற்றாண்டு கதைக்களமான காந்தாராவில் தண்ணீர் கேன் எப்படி வந்தது என்றும், எடிட்டர் மற்றும் கேமரா மேன் எப்படி இதனை கவனிக்க தவறினார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சில ரசிகர்கள் மாஸ்டர் பீஸ் படமாக எடுக்கப்பட்டுள்ள காந்தாராவில் தண்ணீர் கேன் வரும் காட்சி நெருடலாக இருப்பதாகவும், இதனை தயாரிப்பு நிறுவனம் நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.