Chief Minister M.K. Stalin presents Kalaimamani awards to 90 artists

சென்னை,
தமிழக அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் சிறந்த கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதை 90 கலைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அதன்படி நடிகர் விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் அனிருத், பின்னனி பாடகி ஸ்வேதா மோகன் உள்பட மொத்தம் 90 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. பாரதியார் விருது (இயல்) விருது, முனைவர் ந. முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸுக்கும் பாலசரசுவதி விருது (நாட்டியம்) விருது, பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கு வழங்கப்பட்டது.
விழாவில் முதல்-அமைச்சர் பேசுகையில், “தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பிலே நடைபெறக்கூடிய இந்த மாபெரும் விழாவில் கலந்துகொண்டு தலைசிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய கலையை கலைத்தொண்டை இத்தனை ஆண்டு காலம் நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால் அந்த உழைப்பை அரசு அங்கீகரித்து போற்றக்கூடிய இந்த பாராட்டுதான் தலைசிறந்த பாராட்டு. ஏனென்றால் இது தமிழ்நாடு தருகிற பட்டம். 90 வயதான முத்துக்கண்ணம்மாளும் விருது பெறுகிறார், இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் விருது பெறுகிறார். மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு விருது வழங்கப்பட்டுள்ளன.
இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தியபோது, ‘என் மேல் ஏன் இவ்வளவு பாசம்?’ என இசைஞானி இளையராஜா கேட்டார். அவர் மீது நமக்கு இருப்பது கலைப்பாசம், தமிழ்ப்பாசம், தமிழர் என்கிற பாசம். அதனால்தான் பாராட்டு விழா நடத்தினோம். மொழி சிதைந்தால் இனமும் பண்பாடும் சிதைந்து அடையாளத்தை இழந்திடுவோம். கலைகளை காப்போம், மொழியை காப்போம், இதயத்தை காப்போம், இனத்தை காப்போம், அடையாளத்தை காப்போம். நம் கலைஞர்கள் இங்கே மட்டும் அல்ல, உலகம் முழுவதும் சென்று கலைகளை வளர்க்கணும். தமிழ் கலைகளை பரப்ப வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் உதவிகளையும் இயல் இசை நாடக மன்றமும், அரசும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன். நலிந்த நிலையில் வாழும் கலைமாமணிகளுக்கு நிதி உதவி ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.