‘‘200 பெண்களின் இதயங்களை வைத்திருக்கும் மனிதர்'' சிங்கம்புலி குறித்து மிஷ்கின் கலகலப்பு

சென்னை,
டாக்டர் ப.அர்ஜுனன் தயாரித்து அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப், முனீஷ்காந்த், சிங்கம்புலி நடித்துள்ள ‘மைலாஞ்சி’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. சென்னையில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசும்போது வழக்கம்போல சினிமாவின் வரலாறு குறித்து பேசினார்.
அப்போது விழாவில் பங்கேற்ற சிங்கம்புலி குறித்து மிஷ்கின் பேசுகையில், ‘‘தமிழ் வாழ்க்கையைச் சுமக்கும் பானை தான் சிங்கம்புலி. நள்ளிரவில் ‘உற்சாக பானம்’ அருந்திய நிலையில் சிங்கம்புலி என்னை அழைப்பார். நானும் பெரும்பாலும் அந்த சூழலில் தான் இருப்பேன். நள்ளிரவில் எந்த பெண்ணும் என்னிடம் ‘ஐ லவ் யூ’ சொன்னதில்லை. ஆனால் சிங்கம்புலி சொல்வார். ‘எத்தனை ரவுண்டு போய்க்கிட்டு இருக்கு…’ என்று ஜாலியாக பேசிக்கொள்வோம். இரவு 12 மணிக்கு மேல் போன் செய்து ‘ஐ லவ் யூ’ சொல்கிறார் என்றால், குறைந்தபட்சம் 200 பெண்களின் இதயங்களை தனக்குள் வைத்திருக்கும் மனிதர் என்றே சிங்கம் புலியைக் கருதுகிறேன். எது எப்படியோ நல்ல மனிதர் அவர்”, என்று குறிப்பிட்டார். இது விழாவில் கலகலப்பை உண்டாக்கியது.