‘‘கத்தி, ரத்தத்தை நம்பி தற்போது படம் எடுக்கிறார்கள்”- இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை | “They are now making films based on knives and blood”

சென்னை,
டி.எஸ்.கிளமெண்ட் சுரேஷ் தயாரிப்பில் ஜெயவேல் இயக்கத்தில் பூவையார், அஜய் அர்னால்ட், அர்ஜூன், சவுந்தரராஜா ஆகியோர் நடித்துள்ள ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ படம் விரைவில் திரைக்கு வருகிறது.
சென்னையில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, ‘‘ஒரு படத்தின் டிரெய்லரை பார்த்தவுடன் அந்த படத்தைப் பார்க்க தூண்டவேண்டும். சில படங்களுக்கு ‘டிரெய்லர்’ எப்படி கொடுக்கவேண்டும் என்பதே தெரியவில்லை.
வன்முறை படங்களைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று எண்ணி கத்தி, ரத்தம், சத்தம் என்ற மூன்றை நம்பி தான் இப்போதுள்ள இயக்குனர்கள் படம் எடுக்கிறார்கள். எங்கள் காலகட்டத்தில் பொழுதுபோக்கு படங்கள்தான் அதிகம் எடுக்கப்பட்டன. அதற்குள் ஏதாவது தேவையான விஷயங்களை புகுத்தியிருப்போம். நாட்டில் நடக்கும் தவறுகளை தைரியமாக சினிமாவில் சொல்லுவோம்.
சினிமாதான் வாழ்க்கை என்று தற்போது நினைக்கிறார்கள். அதனால்தான் பள்ளி மாணவர்கள் கூட கத்தியுடன் அலைகிறார்கள். வருங்கால சமுதாயம் நன்றாக இருக்கவேண்டும் என்றால், இயக்குனர்கள் கவனமாக இருக்கவேண்டும். சினிமாவை நல்ல விதமாக பயன்படுத்தி வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்று இளம் இயக்குனர்களை கேட்டுக்கொள்கிறேன்”, என்றார்.