“மெண்டல் மனதில்” படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த‘நானே வருவேன்’ படம் 2022ல் வெளியானது. படம் இயக்குவது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார் செல்வராகவன். பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் என்ற அடையாளத்துடன் அறிமுகம் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இரண்டு முறை தேசிய விருதை பெற்றுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில், ‘மெண்டல் மனதில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். இப்படத்திற்கான பூஜை கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இப்படம் தொடர்பான எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தன.
இந்த நிலையில், ‘மெண்டல் மனதில்’ படத்தின் 4-வது கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தள பக்கத்தில் “‘மெண்டல் மனதில்’ படத்தின் 4-வது கட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. செல்வராகவன் சார் இயக்கத்தில்… இந்த குறிப்பிட்ட படத்திற்காக காத்திருங்கள். ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன ஆகிய படங்களுக்குப் பிறகு இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.