22 ஆண்டுகால திரையுலக பயணம் குறித்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி பதிவு

சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. டயானா மரியம் குரியன் என்ற இயற்பெயர் கொண்ட நயன்தாரா 2003ல் வெளியான “மனசினக்கரே” என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2005ம் ஆண்டு வெளியான “ஐயா” படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின்னர், ரஜினிகாந்த், விக்ரம், விஜய், அஜித், சிம்பு, தனுஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரவேற்பை பெற்றார். தற்போது தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளார்.
இந்த நிலையில், திரையுலகில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை நயன்தாரா வெளியிட்டுள்ளார். அதில், “நான் முதன்முதலில் கேமரா முன் நின்று 22 வருடங்கள் ஆகின்றன, ஆனால் திரைப்படங்கள் என் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று தெரியாமல். ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு மௌனமும்… என்னை வடிவமைத்தன, என்னை குணப்படுத்தின, என்னை நானாக மாற்றியது. என்றென்றும் நன்றியுடன்.” என்று பதிவிட்டுள்ளார்.