நடிகை நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை,
அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுக்கும் போக்கு அவ்வப்போது அரங்கேறும். பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி மர்ம ஆசாமிகள் சிலர் புரளிகளை கிளப்புவது வழக்கம். சமீப காலமாகவே சினிமா நடிகர்-நடிகைகளை குறிவைத்து இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நடிகைகள் திரிஷா, சொர்ணமால்யா ஆகியோரின் இல்லங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சமீபத்தில் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. குறிப்பாக நடிகர் எஸ்.வி.சேகர் இல்லத்துக்கு இதுவரை 20 தடவை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நடத்திய சோதனையில் அவை வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதற்கிடையில் நேற்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்த இ.மெயில் கடிதத்தில் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள நடிகை நயன்தாராவுக்கு சொந்தமான சொகுசு இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்களுடன் நயன்தாரா இல்லத்துக்கு விரைந்தனர். அங்கு பாதுகாவலர்களிடம் சாவி பெற்று வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் வழக்கம்போல இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள்.
இங்குள்ள சொகுசு இல்லத்தில் அவ்வப்போது நயன்தாரா தனது குடும்பத்தினருடன் பொழுதை கழிப்பது வழக்கம். சமீப காலமாகவே அந்த இல்லம் மூடப்பட்டிருக்கிறது. காவலாளிகள் மட்டுமே அந்த இல்லத்தில் இருந்து வந்தனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து வெளியூரில் படப்பிடிப்பில் இருக்கும் நயன்தாராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நயன்தாரா இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் திரையுலகில் நேற்று பரபரப்பை உண்டாக்கியது. ஆழ்வார்பேட்டையில் உள்ள வீனஸ் காலனி சினிமா முக்கிய பிரபலங்கள் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இங்கு கார்த்திக், சுஹாசினி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.