“Karur incident” will scar Vijay for the rest of his life – Actor Ranjith | “கரூர் சம்பவம்” வாழ்நாள் முழுவதும் விஜய்க்கு வடுவாக இருக்கும்

திருச்செந்தூர்,
ஜூன் 22ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்தார்கள் என்பதைக் காட்டிலும் சீனா, ஜப்பான், கம்போடியா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் போடப்பட்டன. அதன்படி, வரும் 22ம் தேதி கந்தசஷ்டி திருவிழா திருச்செந்தூரில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக அறுபடை வீடுகளிலும் இந்த வேல் பூஜை நடைபெறுகிறது.
விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்தில் வேல்பூஜை நடந்தது. சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு வேல் பூஜையை தொடங்கி வைத்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது “நாடு நலம்பெற வேண்டி அக்டோபர் 25, 26, 27 ஆகிய கந்தசஷ்டி திருவிழா நாட்களில் ஆயிரம் கோவில்களில் கந்த சஷ்டி பாராயணம் பாடப்படுகிறது. மேலும் வேல் பூஜை, கோ பூஜை போன்ற பூஜைகளும் நடைபெறுகிறது. அதற்கு முன்னோட்டமாக இன்று ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் வேல் கொடுத்து, வேல் பூஜை செய்தேன்.
கரூர் சம்பவத்தால் விஜய் மிகவும் வேதனையில் இருப்பார் என்பது மட்டும் எனக்கு தெரியும். எந்த ஒரு தலைவரும் அவர்கள் கூட்டத்திற்கு வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது. 41 பேர் இறந்தது விஜய்யின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு வாழ்க்கையில் ஒரு வடுவாக நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் என்பது என்னுடைய கருத்து. அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது, எதிரியும் கிடையாது ஜனவரிக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது. அரசியல் என்பது காவல்துறை பிடிக்கும்போது யு-டர்ன் போட்டு திரும்பி செல்வது போன்றது. கடவுள் முன் எல்லோரும் சமம், நாம் மனிதர்கள், அணுக்கள், துகள்கள் தான், எல்லோரும் சமத்துவமாக இருக்க வேண்டுமென்றால் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது நன்றாக இருக்கும்
தேசத்தை காப்பது நமது கடமை. இயற்கை நன்றாக இருக்க வேண்டும், விவசாயம் நன்றாக இருக்க வேண்டும், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், மதப்பிளவு இருக்கக் கூடாது என்பதற்காக இந்த பாராயணம் நடந்தது. நான் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அனைவருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அரசாங்கம் தான் மிகப் பெரிய கடவுள். ஏனென்றால், அவர்கள் நம் கண் முன்னர் இருக்கும் மனித தெய்வங்கள். தமிழக அரசு பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்கள். அவை அனைத்தையும் நிறைவேற்றியிருந்தால், நம் நாட்டு மக்கள் நன்றாக இருந்திருப்பார்கள்.
தமிழ்நாடு இன்னும் வளர்ச்சியடைய வேண்டும். அரசியல்வாதியாக இல்லை, ஒரு வாக்காளராக அந்த வேண்டுதல் எனக்கும் உள்ளது. நல்லவர்கள் தான் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும். ஒருவேளை அந்த பாக்கியம் இருந்து, மக்கள் பணி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் செய்வேன்” என்று கூறினார்.