Actress Malavika Mohanan accuses famous airline

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் தமிழில் களம் இறங்கினார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான ‘மாறன்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த போது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பதிவில், “ஏன் இண்டிகோ விமான சேவையில் பத்துக்கு ஒன்பது விமானங்கள் எப்போதுமே தாமதமாகின்றன? விமானத்திற்குள் பயணிகளை அனுமதித்து அவர்களை உட்கார வைக்கிறோம் என்கிற பெயரில் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதப்படுத்தும் புதிய டிரெண்டை உருவாக்குகிறீர்கள். ஒருவேளை உங்களுக்கு விமானம் புறப்படதாமதம் என்று அறிவிப்பு வந்தால் பயணிகளை விமானத்தில் அனுமதித்து அமர வைக்கும் அந்த வேலையையும் கொஞ்ச நேரம் கழித்து தாமதமாகவே செய்யலாமே?” என்று கேள்வி எழுப்பி உள்ளார் மாளவிகா மோகனன். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.