6 ஆண்டுகளை கடந்த “அசுரன்” படம்: வைரலாகும் மஞ்சு வாரியர் பதிவு

வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவன், 2-வது படமான ஆடுகளம், 4-வது படமாக வட சென்னை, 5-வது படமாக அசுரன் என 4 படங்களில் தனுஷ் தான் ஹீரோவாக நடித்திருந்தார். இதுவரை 7 படங்களை இயக்கியுள்ள வெற்றிமாறன், அதில் 4 படங்கள் தனுஷ் நடிப்பில் இயக்கியுள்ளார். இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருக்கிறது.
இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளியான படம் ‘அசுரன்’. மஞ்சு வாரியர் தமிழ் சினிமாவில் அறிமுகமான இந்த படத்தில், ஆடுகளம் நரேன், பசுபதி, டி.ஜே.அருணாச்சலம், கென் கருணாஸ், அம்மு அபிராபி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே ‘அசுரன்’ திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது.
2019ல் வெளியான ‘அசுரன்’ படம் , எழுத்தாளர் பூமணியின் நாவல் ‘வெக்கை’ அடிப்படையில் உருவானது. தனுஷ் சிவசாமி என்ற விவசாயியாக நடிக்கிறார், அவன் குடும்பத்தைப் பாதுகாக்க போராடுகிறான். கிராமத்தில் சாதி வன்முறை, நிலத் தகராறுகள் ஆகியவற்றை காட்டும் இந்தப் படம், தனுஷுக்கு தேசிய விருதை பெற்று தந்தது.
இதைக் கொண்டாடும் வகையில், நடிகை மஞ்சு வாரியர் இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் ‘அசுரன்’ படத்தின் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், தனுஷின் கதாபாத்திரம் குறித்து, “ஆறு ஆண்டுகளுக்கு முன், சிவசாமிக்கு முன் பழிவாங்குதல் தோற்றது” என பதிவிட்டுள்ளார்.
‘அசுரன்’ திரைப்படம் மஞ்சு வாரியரின் முதல் தமிழ் படம் என்றாலும், ஒரு நேர்காணலில், இந்த படத்தின் கதை கேட்பதற்கு முன்பே அப்படத்தில் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். இருப்பினும், தனுஷ் வற்புறுத்தியதால், படத்தின் கதையை கேட்டுள்ளார். மஞ்சு வாரியர் ‘அசுரன்’ திரைப்படத்தில் பச்சையம்மாள் கதாபாத்திரத்தில் நடித்தது தனக்குக் கிடைத்த ஒரு பாக்கியம் என்று ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். படப்பிடிப்பின் போது, பச்சையம்மாள் போன்ற சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரம் இதற்கு முன் வெற்றி மாறன் படங்களில் வந்ததில்லை என்று படக்குழுவினரே தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார். இந்த ‘அசுரன்’ படத்தின் மூலம் கிடைத்த அனுபவம்தான், வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 2’ திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடிக்க அடித்தளமிட்டது.