சினிமா பின்னணி இல்லாத சிறுமியின் நடிப்பில் பெண்களின் போராட்டத்தை குறிக்கும் படம்

சிவன் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவன் சுப்பிரமணி தயாரித்து, இயக்கியுள்ள புதிய படம், ‘பொம்மி அப்பா பேரு சிவன்’. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவன் சுப்பிரமணி நடித்துள்ளார். படத்தில் கார்னிகா என்ற சிறுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னையை சேர்ந்த அவர் சினிமா பின்னணி இல்லாத ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.
படக்குழுவினர் கூறும்போது, “கிராமத்தில் படிக்க வசதி வாய்ப்பு இல்லாத குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் குழந்தை தாய்-தந்தையை இழந்து உறவுகள் ஏதுமின்றி கஷ்டத்தின் பிடியில் சிக்குகிறார். சாதிக்க துடிக்கும் அவர் எப்படி தன் வாழ்க்கையில் படித்து முன்னேறுகிறார்? என்பதே கதைக்களம். இனி வரும் காலங்களில் கல்வி எவ்வளவு முக்கியம்? என்பதை ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இந்த படம் உணர்த்தும். கல்வி என்பது சாதி, மதம், இனம், மொழி, நிறம் அனைத்தையும் தோற்கடித்து விடும் கல்வி என்ற கருவை வைத்து படத்தை தயாரித்துள்ளோம்” என்றனர்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படம், விரைவில் சர்வதேச சினிமா விழாக்களில் திரையிடப்பட இருக்கிறது.