நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை,
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த அலைபாயுதே படத்தில் ஷாலினியின் அக்காவாக நடித்து பிரபலமானவர் நடிகை சொர்ணமால்யா. இதனை தொடர்ந்து இவர், மொழி, எங்கள் அண்ணா, சங்கரன்கோவில், யுகா, பெரியார், அழகு நிலையம் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென்று தனி இடத்தை சினிமாவில் பிடித்தார். இவர் கடைசியாக புலி வால் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் இவர் சினிமாவை விட்டு விலகிவிட்டார். சினிமாவை தாண்டி நடிகை சொர்ணமால்யா பரதநாட்டியத்தில் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வந்த இ-மெயில் கடிதம் ஒன்றில், ஆழ்வார்ப்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் வசிக்கும் நடிகை சொர்ணமால்யா வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்களுடன் போலீசார் படை புறப்பட்டு சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில், இந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதன் பின்பே வீட்டில் உள்ளவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை தேடும் வேட்டை நடப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீடு, நடிகர் எஸ்.வி.சேகர் வீடு என தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.