80’s actors cinema reunion | 1980-களில் சினிமாவில் நடித்த நடிகர்-நடிகைகள் சந்திப்பு

சென்னை, சினிமா உலகில் 1980 மற்றும் 90 காலகட்டங்கள் இனிமையானவை. அப்போது வெளியான படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தன. எல்லா படங்களுமே அழுத்தமான கதையம்சத்தில் வந்தன. இளையராஜாவின் இசையில் அந்த படங்களில் இடம்பெற்ற பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன. தற்போது ஓரிரு படங்களில் தலை காட்டியதும் ‘மார்க்கெட்’ இழக்கும் நடிகர்-நடிகைகள் போல் அன்றைய நட்சத்திரங்களின் நிலைமைகள் இல்லை. போட்டி இல்லாமல் இருந்ததால் கதாநாயகர்களும் கதாநாயகிகளும் அதிக படங்களில் நடித்து ‘மார்க்கெட்’டை நிலையாக தக்க வைத்து இருந்தார்கள்.தற்போது அந்த கதாநாயகிகளில் அம்மா வேடங்களுக்கு மாறி விட்டார்கள். சிலர் சினிமாவை விட்டே விலகி விட்டனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டும் இன்றைய இளம் நடிகர்களுக்கு இணையாக தொடர்ந்து கதாநாயகர்களாகவே நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
1980 கால கட்டத்து நடிகர்-நடிகைகள் ஒவ்வொரு வருடமும் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். 2024ம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றுள்ளது. வழக்கம்போல் இந்த வருடம் அவர்கள் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, வெங்கடேஷ், ஜாக்கி ஷெரிப், பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர். நிகழ்வில் வித்தியாசமான ஆடைகளுடன் ஆடல், பாடல், நடனமென நடிகர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.