I am enjoying myself even though I have fewer scenes in the film ‘Kandhara Chapter 1’ – Actor Sampathram | ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தில் குறைவான காட்சிகளில் நடித்தாலும் நிறைவாக மகிழ்கிறேன்

கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா – சாப்டர் 1’ என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். இதில் நடிகை ருக்மனி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டு கடந்த 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
பழங்குடிகள் – மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. இப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.65 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் நடிகர் சம்பத்ராம் பேசியபோது, “மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருக்கிற ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தில் நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மலைவாழ் மக்களின் தலைவனாக குறைவான காட்சிகளில் மட்டுமே வந்தாலும், நிறைவாகவும் பெருமையாகவும் நினைக்கிறேன். இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறேன். முதுமையாக இருப்பது போன்று முகத்திற்கு மேக்கப் போட்டிருப்பேன். அதற்கே ஒன்றரை மணிநேரம் ஆகும். அதனை கலைப்பதற்கு ஒரு மணிநேரம் எடுக்கும். மிகவும் சிரமப்பட்டு நடித்தாலும், இவ்வளவு பெரிய பான் இந்தியா படத்தில் நடிக்க எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.