I will not force both cinema and car racing on my children – Actor Ajith | சினிமா, கார் ரேஸிங் இரண்டையும் என் குழந்தைகள் மீது திணிக்க மாட்டேன்

நடிகர் அஜித்குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்குமார். கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது. நேற்று ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற அஜித்குமார் ரேஸிங் அணி 3வது பிடித்து அசத்தியது. 3-ம் இடத்தைப் பிடித்த அஜித்குமார் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
‘குட் பேட் அக்லி’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, அஜித்தின் 64-வது படத்தின் மீது அனைவரது பார்வையும் திரும்பி இருக்கிறது. இது குறித்து அஜித்குமார் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது, ஏ.கே.64 படத்திற்கான கதை தயாராகி வருகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்றார். மேலும் அடுத்த கார் பந்தயத்தில் இந்திய சினிமாவை புரொமோட் செய்ய உள்ளதாகவும், அதற்காக தனது காரில் இந்திய சினிமாவின் லோகோவை பதிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .
இந்நிலையில் ஷாலினி குறித்து பேசியிருக்கும் அஜித், “ஷாலினி கையாளும் விஷயங்கள் ஏராளம். அவருடைய ஆதரவு இல்லையென்றால், இதையெல்லாம் என்னால் செய்ய முடியாது. நான் இல்லாதபோது அவர்தான் வீட்டையும், குழந்தைகளையும் கவனித்துக்கொள்கிறார். குழந்தைகள் என்னைப் பார்ப்பது அரிது, அவர்கள் என்னை மிஸ் செய்வது போலவே நானும் அவர்களை மிஸ் செய்கிறேன். நீங்கள் நேசிக்கும் ஒன்றை செய்ய நினைத்தால் சில நேரங்களில் தியாகங்களை செய்துதான் ஆக வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
மகன் ஆத்விக் குறித்து பேசிய அஜித், “எனது மகனுக்கும் கார் ரேஸிங் பிடிக்கும். அவன் கோ-கார்ட்டிங் தொடங்கியிருக்கிறான். ஆனால் அதில் அவன் இன்னும் அதிக கவனம் செலுத்தவில்லை. சினிமாவாக இருந்தாலும் சரி, ரேஸிங்காக இருந்தாலும் சரி என் கருத்துக்களை குழந்தைகள் மீது திணிக்க நான் விரும்பவில்லை. அவர்கள் எதை செய்ய விரும்புகிறார்களோ அதற்கு நான் ஆதரவு தெரிவிக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.