நடிகர் துல்கர் சல்மானின் மேலும் ஒரு கார் பறிமுதல்

திருவனந்தபுரம்,
பூட்டான் ராணுவத்தால் கைவிடப்பட்ட லேண்ட் குரூசர்கள், லேண்ட் ரோவர்கள், டாடா எக்ஸ்.யூ.வி.கள் போன்ற சொகுசுகார்கள் மற்றும் மஹிந்திரா, டாடா லாரிகள் உள்ளிட்ட 150 வாகனங்களை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து இந்தியாவிற்குள் முறையாக வரி கட்டாமல் சட்ட விரோதமாக கொண்டு வரப்படுவதாக எழுந்த புகார்கள் குறித்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையில் நடிகர்கள் பிரித்விராஜ் மற்றும் துல்சர் சல்மான் ஆகியோர் சிக்கினர். தீவிர விசாரணைக்கு பிறகு துல்கர் சல்மானின் 2 விண்டேஜ் லேண்ட் ரோவர் டிபென்டர் கார்களை சுங்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த நிலையில் கொச்சியில் உள்ள சுங்க ஆணையரகம் (தடுப்பு) நேற்று நடிகர் துல்கர் சல்மானுக்குச் சொந்தமான மற்றொரு காரை பறிமுதல் செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முறை பறிமுதல் செய்யப்பட்ட கார் கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட சிவப்பு நிற விண்டேஜ் நிசான் பேட்ரோல் ஆகும், கொச்சி வென்னாலாவில் உள்ள சல்மானின் உறவினர் வீட்டில் இருந்து இந்த காரை சுங்க அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகனத் துறை அதிகாரிகளின் கூட்டுக் குழு கைப்பற்றி உள்ளது. இதன் மூலம், சல்மானிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
நடிகருக்குச் சொந்தமான 2 விண்டேஜ் லேண்ட் ரோவர் டிபென்டர்களை சுங்கத்துறை ஏற்கனவே பறி முதல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பறிமுதல் செய்யப்பட்ட கார், துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் இடம் பெற்றிருந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் சுங்கத்துறையினர், கேரளா முழுவதும் இதுவரை மோசடியாக பதிவு செய்யப்பட்ட 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், துல்கர் சல்மானுக்கு தொடர்புடைய மேலும் ஒரு வாகனத்தை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.