வெற்றிமாறன் – சிலம்பரசன் இணையும் படத்தின் புரோமோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை,
சிலம்பரசன் தக் லைப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இதில், நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்க வடசென்னை படத்தில் நடித்த சில நடிகர்கள் நடிப்பதாகத் தெரிகிறது. அதாவது இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலானது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், நிதி பற்றக்குறைக்காரணமாக ‘எஸ்டிஆர் 49’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. ஆனால் வெற்றி மாறன் பிறந்தநாளையொட்டி சிலம்பரசன் நடிக்கும் ‘எஸ்டிஆர் 49’ படத்தின் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் இந்த படம் குறித்த புரோமோவை அக்டோபர் 4-ந் தேதி வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். முதல் முறையாக சிம்பு- வெற்றிமாறன் இணைவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என வெற்றி மாறன் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.