‘கிஸ்’ படக்குழுவை பாராட்டிய ‘டிமான்ட்டி காலனி’ பட இயக்குனர்!

சென்னை,
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் கவின். தற்போது இவரது நடிப்பில் கிஸ் என்ற படம் கடந்த 19ந் தேதி வெளியானது. இந்த படத்தினை அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘அயோத்தி’ படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், தேவயானி என பலரும் நடித்திருந்தனர்.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பேண்டஸி ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவான இந்த படம் ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கிஸ் படத்தினை ‘டிமான்ட்டி காலனி’ பட இயக்குனர் அஜய் ஞானமுத்து பாராட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கிஸ் ஒரு அழகான பீல் குட் (Feel Good) திரைப்படம். இந்த படத்தை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அறிமுக இயக்குனர் சதிஷ் அசத்தலாக எடுத்துள்ளார். கவின், பிரீத்தி ஆகியோரின் நடிப்பு பாராட்டுக்குரியது!” என்று பதிவிட்டுள்ளார்.