மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை சம்மன்

சென்னை,
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா திருமணம் செய்து கொண்டதாகக் கூறிய புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும், தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் ஆனதாகவும், அவருடைய குழந்தை தனது வயிற்றில் இருப்பதாகவும் ஜாய் கிரிஸில்டா தெரிவித்திருந்தார்.
இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவிய நிலையில், தன்னை ஏமாற்றியதாகக் கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்திருந்தார். அந்த புகார் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பான விசாரணைக்காக ஏற்கனவே ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அவரிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இதனிடையே, இந்த வழக்கு நீலாங்கரை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இதன்படி வரும் 26-ந்தேதி(நாளை மறுநாள்) மாதம்பட்டி ரங்கராஜ் நீலாங்கரை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.