சாந்தனு போல ஆர்வம் கொண்ட நடிகரை பார்ப்பது அரிது – நடிகர் ஷேன் நிகம் | It’s rare to see an actor as passionate as Shanthanu

பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் , மெட்ராஸ்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகாம். இவர் தற்போது தனது 25-வது படமான பல்டி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். உன்னி சிவலிங்கம் இயக்கிய இப்படம் தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் இவருடன் பிரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் வருகிற செப்டம்பர் 26ம் தேதி வெளியாக உள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
‘பல்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அப்படத்தின் கலைஞர்கள் பேசினார்கள்.
நடிகர் சாந்தனு “பல்டி 4 பசங்களை கொண்ட கதை. ஷேனுக்கு சமமாக மலையாளத்திலோ, தமிழில் மற்றவர்களையோ கூட தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட கதையில் எனக்கு அற்புதமான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. இப்படம் மலையாளத்தில் ரீஎண்ட்ரியாக இருக்கும்.ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன். திருவிழா காட்சியில் தோன்றும்போது வேறு மாதிரி இருப்பார். நாமும் ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்..” என்றார்.
நடிகர் ஷேன் நிகம் “ பல்டி ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா. 4 பசங்க, அவர்களுடைய கபடி குழு. இதில் வில்லன் வந்தால் எந்தளவிற்கு போராட்டமாக இருக்கும் என்பதே படத்தின் கதை. பினு சேட்டா, சந்தோஷ் சேட்டாவிற்கு நன்றி. செல்வராகவன் சாருக்கு நான் மிகப் பெரிய ரசிகன் அவருடைய புதுப்பேட்டை படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். சாந்தனு மாதிரி ஆர்வமுடன் நடிப்பவர்களை பார்ப்பது அரிது. சாய் நன்றாக இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. இப்படம் பிடித்திருந்தால் ஆதரவு கொடுங்கள்” என்றார்.
சக்கரகட்டி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் சாந்தனு. பாக்யராஜ் மகன் என்ற அடையாளத்துடன் நடிக்க தொடங்கியவர் சினிமாவில் நுழைந்து 17 வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த ஆண்டு தமிழில் வெளியான புளூ ஸ்டார் திரைப்படம் சாந்தனுவிற்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது.