நடிகர் ரோபோ சங்கர் மறைவு: கமல்ஹாசன் இரங்கல்

சென்னை,
சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது நடிகர் ரோபோ சங்கருக்கு திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர்சத்து குறைவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ரோபோ சங்கருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
நேற்று மாலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினர். ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ரோபோ சங்கர்.. ரோபோ புனைப்பெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி… போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ?… உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” என்று தெரிவித்துள்ளார்.