காசா போர் நிறுத்தத்திற்காக ஒன்றிணைந்து குரல் கொடுத்த ஹாலிவுட் நட்சத்திரங்கள்

வாஷிங்டன்,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. அதேவேளை, ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
பணயக் கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 50 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களால் காசா முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. இதுவரை சுமார் 55 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பல்வேறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், பாலஸ்தீனத்திற்காக ஒன்றிணைவோம் என புகழ்பெற்ற 40 ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற பாடகி பில்லி ஐலிஷ், நடிகர் கிலியன் மர்பி, ஜோக்கின் பீனிக்ஸ் உள்ளிட்ட 40 பிரபலங்கள் காசா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு, பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.