‘Kalki 2898 AD’ Part 2 No Deepika Padukone – Production Company Announces | “கல்கி 2898 ஏடி” 2ம் பாகத்தில் தீபிகா படுகோன் இல்லை

தீபிகா படுகோன் தமிழில் கோச்சடையான் படம் மூலம் அறிமுகமானார். இந்தியில் வெளியான ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் அறிமுகமான அவர் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து பிரபலமானார். பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ரன்வீர் சிங் – தீபிகா படுகோன். திரையுலகில் இருவரும் இணைந்து நடித்து வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார்.
கல்கி திரைப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியானது. இப்படம், உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றாக அமைந்தது. மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது ‘கல்கி 2898 ஏடி’. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என தயாரிப்பு நிறுவனம் விஜயாந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில், “ ‘கல்கி 2898 ஏடி’ இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோனே இடம்பெற மாட்டார். இதை நாங்கள் நீண்ட ஆலோசனைக்குப் பின் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவாகும். அவருடைய ஒத்துழைப்பு சரியாக இல்லாததால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். கல்கி போன்ற படத்திற்கு அதிக கமிட்மெண்ட் தேவை. தீபிகா படுகோனே எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துகள் ” எனத் தெரிவித்துள்ளனர்.
பிரபல தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ள ஸ்பிரிட் படத்திலிருந்து தீபிகா நீக்கப்பட்ட நிலையில், தற்போது பிரம்மாண்ட தெலுங்கு படமான கல்கி ஏடியிலிருந்தும் நீக்கப்பட்டது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபிகா, தற்போது அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாகி உருவாகி வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கல்கி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.