“குட் பேட் அக்லி” தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

சென்னை,
அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் அஜித் ரசிகர்களை கடந்தும் வரவேற்பை பெற்றது. இப்படம் உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இளையராஜா இசையமைத்த சில பாடல்களின் ரீமிக்ஸ் வெர்ஷன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘குட் பேட் அக்லி’ படத்தில், தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா ரூ. 5 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பினார். பாடல்களின் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றுவிட்டதாக ‘குட் பேட் அக்லி’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியது, பதிப்புரிமை சட்டத்துக்கு விரோதமானது என்றுகூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், அனுமதி பெற்றதாகக் கூறப்படும் அந்த உரிமையாளர் யார்? என்பது குறித்து குட் பேட் அக்லியின் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, தனது அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், படத்தில் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குட் பேட் அக்லி படத்தில், இளையராஜாவின் இசையில் ஏற்கனவே வெளியான திரைப்படத்தில் உள்ள 3 பாடல்களையும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மனு குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி ‘குட் பேட் அக்லி’ படத்தில் தொடர்ந்து தன்னுடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இளையராஜா தரப்பில் தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாடல்கள் பயன்படுத்துவதை நிறுத்தி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும் என நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.